முத்துக்குமார் தீயாய் இன்று எல்லோர் மனதிலும்

முழுதாக ஒரு வருடம் ஓடி விட்டது. இனம் அழிவது கண்டு தமிழகத்திலிருந்து உண்மையில் போராடிய முதல் வீரனான முத்துக்குமரன் வீரமரணம் அடைந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. எது நடக்கக் கூடாது என்று தன் உயிரைப் பணயம் வைத்தானோ அதற்கும் மேலாகவே எல்லாம் நடந்து விட்டது. உணர்வுகள் ஏதுமற்று தன் குடும்பம், தன் சுற்றம் என்று மட்டும் வாழ்ந்து மண்ணோடு மக்கிப் போகும் கோடிக் கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அவன் கோரிக்கைகள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டன. ஒரு மிருகம் முத்துக்குமாரா யார் என்று கேட்டது. அதிகாரப் பேய்கள் சூழ்ந்து கொண்டு முத்துக்குமாருக்காகக் கூடிய கூட்டத்தை வஞ்சகமாய் கலைத்தன. நம் எதிரிகள் அனைவரும் முன்னை விட பலம் பொருந்தியவர்களாக ஆகி விட்டனர். துரோகிகள் அனைவரும் செல்வச் செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். தனித்து விடப்பட்ட இனம் இப்போது எந்த திசையிலிருந்து நம்பிக்கை ஒளி வரும் என்று எட்டு திக்கும் பார்த்துப் பார்த்து சோர்ந்து போயுள்ளது.



அடிமையாகப் பிறந்து, அடிமையாக வாழ்ந்து அடிமையாகவே சாக ஆசைப்படும் ஒரு இனத்தில் பெரியாரும், பிரபாகரனும் முத்துக்குமரனும் பிறந்தது அதிசயமான நிகழ்வுகள் தான். பெரியார் ஏற்றி வைத்த தீபம் நம்மை ஓரளவேனும் சுய மரியாதையோடு வாழ வைத்துள்ளது. தலைவர் பிரபாகரன் ஏற்றி வைத்த தீபம் விடுதலைத் தீயாய் இந்த உலகிற்கு தமிழினத்தை அடையாளப்படுத்தியிருக்கிறது. முத்துக்குமரன் ஏற்றி வைத்த தீபம் உணர்வுள்ள எல்லோர் மனதிலும் களங்கமற்ற உறுதியை ஏற்படுத்தி உள்ளது.

என்றோ ஒரு நாள் முத்துக்குமரனின் நினைவு நாள் தமிழீழத்தில் நடக்கும் என்ற உறுதியோடு முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்


free web hit counter image