கல்லூரிக்கு போகலாம்

இடஒதுக்கீட்டிற்கு எதிராக படம் எடுத்த சங்கரின் கூடாரத்திலிருந்து இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான வசனங்களுடன் ஒரு படம் வெளிவந்திருப்பது விந்தை தான்.

படத்திலே பாராட்ட பல விசயங்கள் இருந்தாலும் இந்த வசனம் தான் பாலாஜி சக்திவேலின் சமூகப் பார்வையை உணர வைத்தது.

நாயகி நாயகனிடம் சொல்கிறாள்
"முத்து நான் படிக்கறது பெரிய விசயம் இல்ல. ஏன்னா எங்க தாத்தா Judge, எங்க அப்பா IG .நீ படிக்கறது தான் முக்கியம்"

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் நாயகி உயர்ஜாதி என்று சொல்லப் படுகின்ற வகுப்பைச் சார்ந்தவள்.

இந்த படம் பார்த்த அன்று காலையில் தான் கலைஞர் டிவியில் பாலாஜி சக்திவேலின் பேட்டியைப் பார்த்தேன்.
அவருக்கும் சங்கருக்கும் பல நேரங்களில் மனஸ்தாபங்கள் ஏற்படுமாம். அதுவும் முக்கியமாக சங்கரின் படங்களில் வரும் கதாநாயகன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக காட்டப்படுவதில் இருவருக்கும் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் ஏற்படுமாம்.

இனி படத்திற்கு வருவோம்

எதார்த்ததிற்கும் தமிழ் சினிமாவிற்கும் எப்போதும் தூரம் அதிகம்.
தமிழ் சினிமாவின் பிரம்மாக்கள் என்று சொல்லிக் கொள்ள கூடிய மணிரத்னம், பாரதிராஜா மற்றும் பலரும் கூட கமர்சியல் என்ற சகதியில் சிக்கி கரையேர முடியாமல் போனவர்கள் தான்.

முதலில் கதாபாத்திர தேர்வு. எங்கிருந்து பிடித்தாரோ இத்தனை அப்பட்டமான கல்லூரி மாணவர்களை. நகைச்சுவைக்கு கூட செயற்கையாய் நடிக்கவில்லை அவர்கள்.

அடுத்து நாயகனின் தங்கையாக வரும் அந்த சிறுமி. அந்த முகத்தில் நிறைந்திருப்பதெல்லாம் அப்பாவித்தனம் மற்றும் வறுமை. படத்தைப் பார்த்து பல நாட்கள் ஆனாலும் அந்த முகம் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது.

ஒரு திருமண விழாவிலே நாயகியை பாட மேடைக்கு அழைப்பார்கள். மற்ற இயக்குனராக இருந்திருந்தால் ஆஹா அருமையான சிச்சுவேசன் என்று இந்த இடத்தில் ஒரு புது பாடலை போட்டிருப்பார்கள். ஆனால் பாலாகி சக்திவேல் அந்தத் தவறை செய்யவில்லை. வெகு இயல்பாய் நாயகி மேடை ஏறி பழைய பாடலான "உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்" என்ற பாடலை முழுவதுமாகப் பாடி முடிப்பது கவிதை.

இடையில் நண்பர்களுக்கிடையேயான ஊடல், கலாட்டா போன்ற விசயங்கள் இயல்பாய் காட்டப்படுகின்றன.

தருமபுரியில் நடந்த பேருந்து எரிப்பு சம்பவம் போன்று இறுதியில் வரும் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று தான். இது போன்ற விபத்துக்கள் வர போகிறேன் என்று சொல்லி வைத்துக் கொண்டா வரும்.
இருந்தும் மிகக் கொடுமையான காட்டுமிராண்டித் தனம் அரங்கேறி அதற்கான தண்டனையும் அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில் அதை திரும்பவும் எண்ணிப் பார்ப்பது
இறந்த உயிர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கட்டும்.
free web hit counter image


1 comments:

said...

/நாயகி நாயகனிடம் சொல்கிறாள்
"முத்து நான் படிக்கறது பெரிய விசயம் இல்ல. ஏன்னா எங்க தாத்தா Judge, எங்க அப்பா IG .நீ படிக்கறது தான் முக்கியம்"/

இந்த வசனத்தை அவர் சொல்வது அவன் ஏழ்மையைப் பார்த்து. அதாவது, இட ஒதுக்கீட்டில் பொருளாதாரக் காரணிகளைக் கொண்டு வர வேண்டும் என்ற பார்ப்பனீய கொள்கை தான் அது.

இது எப்படி இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகும்...

ஜமாலனின் பதிவைப் பாருங்களேன்.