எழுத்தும் எதிர்ப்பும் தஸ்லிமா நஸ் ரீன்

எழுத்தும் எதிர்ப்பும்
களந்தை பீர்முகம்மது


தஸ்லிமா நஸ் ரீன் அண்மையில் மதவாதிகளால் தாக்கப்பட்டிருக்கிறார். ஹைதராபாத்தில் அவருடைய நூலின் மொழியாக்கம் வெளியிடப்பட்டபோது, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தாக்கிய நபர்களின் அந்தஸ்து சாதாரணத் தொண்டர்களில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளது. மதவாதம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வரும்போது, தன் மேம்பாட்டை உணர்த்திக்கொள்வதற்கான அடையாளமாகத் தன் அடியாள்களின் நிலையையும் உயர்த்திக் கொள்ளும் போலும்


இந்தத் தாக்குதல் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனாலும் ஆறுதலான செய்தியும் இல்லாமலில்லை. குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஹமீத் அன்சாரிக்கு, தன் கண்டனத்தைப் பதிவுசெய்வதுதான் முதல் வேலையாக அமைந்துள்ளது. வெற்றிபெற்றபின் நிருபர்களுக்கு மத்தியில் தோன்றிய அவர், வேறெந்தப் பின்விளைவுகளையும் மனத்தில் கருதாது உடனடியாகவே செயல்பட்டிருப்பது நல்ல செய்தி.

லஜ்ஜா நாவலை எழுதியது முதற்கொண்டே தஸ்லிமாவுக்குச் சோதனைக் காலம் ஆரம்பமாகிவிட்டது. அந்த நாவல் உரிய முறையில் புரிந்துகொள்ளப்படாதது பெரிய சோகம். முஸ்லிம்களின் சில தவறான நடைமுறைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருப்பதையும் மத அடிப்படைவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும், ஒரு பெண்ணின் எதிர்ப்பும் எழுத்துக்களும் எந்தவொரு மதத்தின் நியாயசபையிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒரு பரிசீலனைக்குரிய விசயமாகக்கூட அவை கருதப்படமாட்டா. மனித சக்திக்கு மீறிய கால ஓட்டத்தினால்தான் எல்லா மதங்களின் அடிப்படைவாதிகளும் 21ஆம் நூற்றாண்டில் வந்து விழுந்துகிடக்கிறார்களே தவிர, தம் சிந்தனை மரபுகளாலும் நாகரிக உந்துதலினாலும் இங்கு இன்னும் அவர்கள் வந்து சேரவில்லை. அதனால்தான் கலை வெளிப்பாடுகளும் கருத்து வெளிப்பாடுகளும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. தஸ்லிமா நஸ்ரீன்மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த மாறாத உண்மையைத்தான் மீண்டுமொருமுறையாக உணர்த்தியுள்ளார்கள். மஜ்லிஸ் இதேஹதுல் முஸ்லிமின் என்னும் அமைப்பின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகரிகச் சந்தையில் வேறு எதையும் கொள்முதல் செய்பவர்களல்ல. அவர்களிடம் நிரந்தரமாகத் தங்கியிருப்பது கும்பல்ரீதியாகச் செயல்படும் கோழைத் தனமே!

இப்படியொரு மத அடிப்படைவாதத் தன்மையை அவர்கள் ஆண்டுக்காண்டு புதுப்பித்துக்கொண்டிருப்பது மதத்தின் மீதான பற்றுதலினால் அல்ல; குர்-ஆனின் மீதான மரியாதையினாலும் அல்ல! இவற்றின் மீதான புரிதலை அவர்கள் வளர்த்துக்கொண்டிருந்தால், தஸ்லிமா நஸ்ரீனுக்கு எதிராக எழுதும் இன்னொரு பேனா அவர்கள் கைக்கு வந்து சேர்ந்திருக்கும். எப்போது மாற்றுக்கருத்துகளை மக்கள் புரிந்துகொள்ளும்படி சொல்ல முடியவில்லையோ அப்போதெல்லாம் தாக்குதல் மட்டுமே அடிப்படைவாதிகளுக்குக் கைவந்தகலையாக இருக்கின்றது. புரிந்து கொள்ளும்படி சொல்ல முடியாத காரணம் என்ன? மாற்றுக்கருத்துகளை அவர்களால் குர்-ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் பெறமுடியாமல் போவதே சரியான காரணம். குர்-ஆனையும் ஹதீஸையும் காலங்காலமாக வாசித்துக்கொண்டிருப்பது ஆணாதிக்கம் மட்டுமே! ஆண்கள் நிரம்பிய சபைகளில் ஆண்கள் மாத்திரம் நிகழ்த்தும் மார்க்க உரைகள் ஒரு சிற்றோடைபோலவே முஸ்லிம் சமூகத்தை வந்து சேருகின்றது. பல்வேறு தரப்பினருக்கும் இது போதாமையாகவே இருக்கின்றது.

ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக மத அடிப்படைவாதிகள் முன்னகர்ந்து வரும்போது, அங்கு வேறெந்தவிதமான தர்க்க நியாயங்களுக்கும் இடமிருப்பதில்லை; அவர்கள் ஆண்களாகவே இருப்பது கூடுதல் கெட்ட அம்சம்! தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணுரிமைக் கருத்துகள் நான்குகால் பாய்ச்சலைக் கொண்டவை. அவை தவறானவை எனச் சமூகம் கருதினால், அதற்கான காரணமும் சமூகத்தின் நடைமுறைகளுக்கு உள்ளேதான் உள்ளது. இதைச் சமூகம் திருத்திக்கொள்ள முன்வர வேண்டும்
தஸ்லிமா நஸ்ரீனின் மீதான தாக்குதல் நடந்த இந்தக் காலகட்டத்தை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள். முஸ்லிம்களின் வாழ்வு நாலாத் திசைகளிலிருந்தும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது; இவர்களோ தஸ்லிமாவைத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டிய சச்சார் குழு அறிக்கை, அதன் தொடர்பாக எழுந்த இட ஒதுக்கீடு சம்பந்தமான பலத்த கூக்குரல், மும்பைக் குண்டுவெடிப்புகளில் ஏராளமான முஸ்லிம்கள் மரணதண்டனை முதல் ஆயுள் தண்டனைவரை பெற்றிருப்பது, இதுபோன்ற தண்டனைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கோவைக் குண்டு வெடிப்புக் குற்றவாளிகள், முஸ்லிம்கள்மீது மட்டுமே திரும்பத் திரும்பக் குத்தப்படும் பயங்கரவாத முத்திரை, இந்தியப் பாதுகாப்புத் துறையும்-மாநிலக் காவல் துறைகளும் முஸ்லிம்கள்மீது மேற்கொள்ளும் என்கவுன்ட்டர்கள், காஷ்மீர்ப் பிரச்சினை, ஈராக்-ஈரான்-ஆப்கன்-எல்லாவற்றுக்கும் மேலான நிரந்தர பாலஸ்தீனப் பிரச்சினை, ஆஸ்திரேலியாவில் டாக்டர் ஹனீஃப் நடத்தப்பட்ட விதம் என இவையெல்லாமும் பின்னிப் பிணைந்து முஸ்லிம்களை வதைத்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முஸ்லிமும் உலகப் பயங்கரவாதியாகச் சித்திரிக்கப்பட ஒரு தூசு அல்லது துரும்பு போதும்! ஆனால், இங்குள்ளவர்களும் வேறெங்கு உள்ளவர்களும் மத அடிப்படைவாதப் பிரச்சினைகளில் மட்டுமே இணைகிறார்கள்; போராடுகிறார்கள். மும்பை, கோவைக் குண்டு வெடிப்புகளில் தீர்ப்புகள் வெளிவந்திருக்கும் இச்சமயத்தில், முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டிய காரணிகள் உள்ளன. அந்த இரண்டு நகரங்களிலுமான குண்டு வெடிப்புகளுக்கு முன்னாலும் அந்நகரங்களில் பயங்கரமான வன்முறைகள் வெடித்துக் கிளம்பின. அவற்றில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாயினர்; முஸ்லிம் மக்களின் சொத்துகள் அழிக்கப்பட்டன; அவர்கள் வேறிடங்களுக்கு விரட்டப்பட்டார்கள். பலர் ஊனமடைந்தனர். ஆனால், இத்தகைய கொடூரங்களுக்கு இன்னும் வழக்குகள் பதிவாகவில்லை; குற்றப் பத்திரிகைகள் இல்லை; விசாரணை இல்லை! நீதி இல்லை. ஆனால், இதற்குப் பின்னர் நடந்தவற்றிற்கு எல்லாம் முடிந்து மரண தண்டனைவரை வந்தாகிவிட்டது. மும்பைக் கலவரங்களை விசாரித்து எல்லா உண்மைகளையும் கோரங்களையும் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனின் அறிக்கை. இதற்கெல்லாம் முஸ்லிம்கள் போராடியே தீர வேண்டிய நெருக்கடி இருக்கின்றது; நீதி நியாயங்களைக் கோரிப்பெறும் அவசியம் இருக்கின்றது. ஆனால், இந்தப் போராட்டங்களை முன்னெடுக்க, நீதியின் குரலை முழக்க இன்று இங்கே எந்த இஸ்லாமிய அமைப்பும் இல்லை. எந்த முஸ்லிம் ஜமாத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை. யாருக்கும் அதைப் பற்றிய அக்கறையில்லை. ஆனால், தஸ்லிமாவை அடித்து விரட்டும் அளவுக்கு இங்கே வீரம் மண்டிக்கிடக்கின்றது.

இது போன்ற மற்றொரு பிரச்சினையில் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் குடிக் கலாச்சாரம் குறித்த அவருடைய கருத்தரங்கக் கட்டுரைக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார் ஹெச்.ஜி. ரசூல். அவருடைய கட்டுரை மறுக்கப்படவோ தவறானது என்று சுட்டிக்காட்டவோ நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இஸ்லாம் குறித்து இன்னும் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ரசூல் சுட்டிக்காட்டுகிற அனைத்துமே தக்க ஆதாரங்கள் கொண்டவை என்று அவர் கூறுகிறார். இதனை மேலும் பரிசீலிக்க வேண்டியது அவசியம். நம்மைச் சூழ்ந்துள்ள திருமண உறவு முறைகள், வணிக உறவுகள், அரசியல் தொடர்புகள், மற்றும் பிற நெருக்கடிகளில் இஸ்லாமியக் கோட்பாட்டின் ஏதாவது ஒரு எல்லையை நாம் மீறிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அவை கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை. மாறாக அதை வெளிப்படுத்தும் கலை, இலக்கிய வடிவங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற சமூகச் சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் சேதங்களையே உண்டாக்கும். ஆய்வுகளை முன்வைப்போர் எதிரிகளாகப் பாவிக்கப்படுவது கடும் தவறு. பண்டைய யுத்த தந்திரங்களிலேயே மூழ்கி மூழ்கி, பொது எதிரியின் அடையாளத்தை மறந்துவிட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் ஆகிக்கொண்டிருக்கிறது. தன் நிழலை எதிரியாக்கி அந்நிழலோடேயே சண்டைபோட பயிற்சி கொடுக்கப்படுகின்றது முஸ்லிம் சமூகம். உள் முரண்களுக்கு ஒன்று கூடும் முஸ்லிம்கள், எப்போது வெளி எதிரிகளைப் பார்ப்பார்கள்? சுயமான தங்கள் அரசியல் சக்தியை மீட்டெடுக்கும் அவசியத்தை எப்போது உணர்வார்கள்?
காலச்சுவடு

http://kalachuvadu.com/issue-93/page32.asp

free web hit counter image1 comments:

said...

சமூகத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்களை மரபுகள் மீறி துணிச்சலுடன் வெளி உலகத்திற்கு அறியகொடுக்கும் தஸ்லிமா போன்றவர்களின் சேவைகளை நல்ல தருணமாக பாவித்து அந்த மதத்தினர் தத்தம் தவறுகளை திருத்தி நாகரீக வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் வாழக்கற்றுக் கொள்ளவேண்டும்.

இதை விட்டுவிட்டு, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என அடம் பிடித்தால், அவர்கள் சார்ந்த சமூகத்திற்குத்தான் கேடு.

தஸ்லீமா ஒரு முழு தனி மனிதர். சுதந்திரமாக எழுதவோ, பேசவோ இந்திய சுதந்திர தனியுரிமை, பொது சமூக, மத நம்பிக்கை சட்டங்களை மீராதவரை அவரது படைப்புகள் அனைத்தும் வரவேற்கத்தக்கதே.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீஷரன்.